அறிவியல் உச்சத்தில்
மனிதன். அழிவின் உச்சத்தில் உலகம்
|
இன்று
உலக மக்கள் பலருக்கும் உலக வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வோ, புரிதலோ இல்லை. அதனை
அனைவரும் அறிய வேண்டியது அவசியம்.
உலக
வெப்பமயமாதல் என்பது புவியின் நிலம், கடல், காற்று ஆகியவற்றின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து
உயர்ந்து கொண்டே வரும் நிலையே ஆகும்.
மனித
குலம் இயற்கையை அழித்து தனது ஆசைக்காகவும் அதிகப்படியான தேவைக்காகவும் அதிக அளவு அறிவியலைப்
பயன்படுத்துவதே இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. தொழிற்புரட்சி மற்றும் மக்கட்தொகை
பெருக்கத்தின் காரணமாக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது.
இதன் விளைவாக, வாகனங்கள்
மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சு வாயுக்களான கார்பன்-டை-ஆக்சைடு (CO2),
குளோரோ ஃபுளோரோ கார்பன்(CFC) மற்றும் சல்ஃபர்-டை-ஆக்சைடு (SO4) போன்ற வாயுக்களின்
காரணமாக புவியின் சராசரி வெப்பநிலை அபரிமிதமாக உயர்கிறது. மேலும், பசுமை இல்ல விளைவு
காரணமாகவும் புவி வெப்பமடைகிறது.
பசுமை இல்ல விளைவு
பசுமை இல்ல விளைவு என்பது வெப்பததை அப்படியே தக்க
வைத்துக் கொள்வதாகும். குளிர் நாடுகளில் தாவரக் கன்றுகளை வளர்ப்பதற்காக அமைக்கப்படும்
இல்லங்களை பசுமை இல்லம் என்று அழைக்கிறார்கள். இவ்வில்லங்கள் வெளியே இருக்கும் கடுங்குளிரைவிட
அதிக வெப்பம்கொண்டதாக இருக்கும். அதாவது வெளி வெப்பம் உள்ளே செல்லாமல் தடுக்கப்பட்டிருக்கும்.
அது மட்டுமில்லாமல் உள்ளே உருவான வெப்பமும் வெளியே செல்லாது. இதற்கு முக்கியக் காரணம்
உள்ளே இருக்கும் தாவரக் கன்றுகள் வெளிவிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெப்பத்தை வெளியே
வரவிடாமல் உள்ளேயே தக்க வைத்துக் கொண்டிருக்கும். கார்பன்-டை-ஆக்ஸைடு வெப்பத்தை
வெளியே விடாமல் போர்வையாகப் போர்த்திப் பாதுகாத்துக் கொள்ளும். இதுதான் பசுமை
இல்ல விளைவு ஆகும். இந்தப் பசுமை இல்லங்களில் ஏற்படும் விளைவு போன்றே
பூமியும் ஒரு பசுமை இல்லமாக மாறிவிட்டது. பசுமை
இல்ல விளைவிற்கு முக்கியக் காரணம் நமது சுற்றுச்சூழல் கார்பன்-டை-ஆக்ஸைடால்
நிரப்பப்பட்டு வருவதுதான்.
அழிவின் நுனியில் உலகம்
IPCC (INTERGOVERMENTAL PANEL ON CLIMATE
CHANGE) என்ற பருவநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு வெப்பமயமாதல் பற்றி ஓர் ஆய்வறிக்கையை
வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உலக வெப்பமயமாதலின் விளைவுகள் படுபயங்கரமானதாகவும்
படுமோசமானதாகவும் இருக்கும் என எச்சரித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில் கடந்த நூற்றாண்டில்
மட்டும் பூமியின் வெப்பம் 0.74°C உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, 2001 முதல்
2012 வரை அதிக வெப்பமான ஆண்டுகளாக அறிவுத்துள்ளது. இதன் விளைவாக, கடல் நீர் மட்டம்
1.5 செ.மீ. அளவுக்கு உயர்ந்துள்ளது என தெரிய வருகிறது.
அண்டார்டிகா, ஆர்ட்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில்
உலக வெப்பமயமாதல் விளைவாக பனி மலைகள் அதிகமாக உருகி வருகிறது. இதனால், சென்னை, மும்பை,
கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்கள் கடலில் மூள்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், உலக வெப்பமயமாதலின் விளைவால் பருவநிலை மாற்றம்,
தண்ணீர் தட்டுப்பாடு, வறட்சி, எரிமலை வெடிப்பு, சுனாமி போன்றவை எற்படலாம் என எச்சரித்துள்ளது.
ஓசோனில் ஏற்பட்டுள்ள துளை உலக வெப்பமயமாதலால் இன்னும்
பெரிதாக்கூடும் என்றும், இதனால் சூரியனின்
புறஊதாக்கதிர்கள் பூமியை அதிகம் பாதிக்கும் என்றும், அதனால், பல்வேறு நோய்கள் மனிதனை
வாட்டும் எனவும் கூறியிருக்கிறது. இதே நிலை தொடருமானால், இன்னும் சில நூற்றாண்டுகளில்
உலகம் அழியும் எனவும் பயமுறுத்துகிறது.
ஏற்றம் தரும் மாற்றம்
- சமூகம் என்பது தனிமனித தொகுப்பே ஆகும். எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் உலக வெப்பமயமாதலைத் தடுக்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- இயற்கையோடு இணைந்த வாழ்வு
- நாம் பயன்படுத்தும் வாகனத்தை சரியாக பரிமரித்து, அதிக புகையை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
- பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி எறியாமல், மறு சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.
- வீட்டிலோ, பக்கத்தில் இடம் இருந்தாலோ, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம்.
- நாம் வாங்கிப் போட்டுள்ள இடங்களில் தற்போதைக்கு குடியேற முடியாமல் இருந்தாலும், அவற்றில், ஒரு சில மரங்களையாவது நட்டுவிட்டு வரலாம்.
- வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றலாம். குண்டு பல்புகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கலாம்.
- தேவையற்ற மின் சாதன பயன்பாட்டை தடுக்கலாம். ஒரு யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது, 2 யூனிட் மின்சார உற்பத்திக்கு சமம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே, தேவைக்கு அதிகமாக தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கியிருந்தால் எவ்வாறு உபயோகிப்போமோ அப்படி உபயோகித்தால் நாட்டுக்கு நல்லது.
- கணினிகளைப் பயன்படுத்தும் போது, 10 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், தானாகவே மானிட்டர்கள் ஆப் ஆகும் வகையில் செய்து விடுங்கள்.
- அனைவரும் வீட்டில் ஒரு சைக்கிளை வாங்கி வைத்துக் கொண்டு அவசரத்துக்கும், தனியாக கடைக்கும் செல்ல வேண்டும் போது சைக்கிளைப் பயன்படுத்தினால், உடலுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
- ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டி இருந்தால், அதற்கு பதிலாக குறைந்த்து 5 மரக்கன்றுகளையாவது நட்டு வையுங்கள்.
- சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைத் தயாரித்து இயங்கும் கருவிகளை வாங்கி பயன்படுத்துங்கள்
- வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்
- சுற்றும் பூமியை நெருப்பு பற்றிக் கொண்டிருக்கிறது. அறி(ழி)வியல் உச்சத்தில் மனிதன். அழிவின் உச்சத்தில் உலகம்.
மனித குலமே!
இயற்கையை வாழ வைப்போம்.
இயற்கை நம்மை
வாழ வைக்கும்.
- ம.சுரேஷ்